Archive for மே, 2009

காதலில் புரிதல் இன்றி காதலர்களுக்குள் ‘புரிதல்’ வருமோ

“கவிதாவிற்கு கல்யாணமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் பிரிந்து விட்டார்களாமே… “

“சித்ராவிற்கு குழந்தை பிறந்தும் கணவன் வரவில்லை. விவாகரத்து நோட்டீஸ் தான் வந்தது. தொலைந்தது சனியன்னு வாங்கிட்டு வந்துட்டாளாம்.. தெரியுமோ… “

“இரண்டு வருஷமா காதலித்தவர்கள் கல்யாணமாகி ஆறு மாதத்தில் பிரிந்துவிட்டார்கள்”

இந்த பேச்சுக்கள் இப்போது சர்வசாதாரணமாகி நம் காதுகளுக்கு வருகின்றன. இந்த வேதனை நிலையை பரீசிலித்து சிலர் தீர்மானம் சொல்வதும் உண்டு. “இரண்டு பேருக்கும் புரிதல் இல்லை” இதில் பரிதாபமான நிலை என்னவென்றால், காதலித்து திருமணம் செய்து கொள்பவரிகள் கூட பிரிவதற்கு காரணமாக இருப்பது “புரிதல் இன்மை” தான்.

சாதியில் உட்பிரிவைக்கூட தாண்ட விரும்பாத பெற்றோர்கள், காதலுக்காக எல்லாவற்றையும் தாண்டி வந்து பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பவர்கள் உண்டு. கணினி யுகத்தில் ‘ஜாதகம்’ நிறுவனப்படுத்திவிட்ட நிலையில் 16 கட்டங்கள் பெண்கள் தாண்ட முடியாத சூழலில் ‘காதல்’ அவளுக்கான ஆதரவு என நிம்மதி கொள்ள முடிகிறதா..

திருமணத்திற்கு பின்பும் பல கட்டங்களை தாண்ட வேண்டியுள்ளதே.. காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் இந்த சங்கடங்கள் வரத்தான் செய்கின்றன. மீண்டும் பெண்ணின் மீது பழி போடுவது தான். ஆக, “புரிதல்” பற்றிதான் புரிந்து கொள்ள வேண்டும்.

‘யூத்’ படத்தில் சக்கரை நிலவே பாடலில் கதாநாயகியை பார்த்து கேட்கும் கேள்வி –

நவம்பர் மாதம் நனைவது, சுசீலாவின் குரல் கேட்பது போன்ற எனக்கு பிடித்த பலவற்றை உனக்கு பிடிக்கிறது ஆனால் என்னை மட்டும் ஏன் பிடிக்கவில்லை.

இந்த கேள்வியைத்தான் நாம் திரும்பி கேட்கிறோம். காதலில் இருவருக்கும் “புரிதல்” என்பது இருவருக்கும் என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொள்வது மட்டும் தானா? இருவருக்கும் ‘ஒன்றெ’ பிடிக்கும் என்றாலே காதல் தானா? பல காதல் இப்படித்தான் மேலோட்டமான புரிதலில் உருவாகிவிடுகிறது. உணர்ச்சிகளின் பிடியில், வாழ்க்கையின் முக்கியமான முடிவெடுக்கும் போது எவ்வளவு பொறுமை வேண்டும். எவ்வளவு ஆழமான புரிதல்களை நோக்கி அவர்கள் பரீட்சித்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் அவர்கள் லட்சியங்கள் என்ன?

ஆதாரங்கள் என்ன?

பிரச்சனைகளின் போது அவர்கள் அனுகுமுறை என்ன?

வரதட்சனை பிடியிலிருந்து வெளிவர இருவருக்கும் உறுதி உள்ளதா?

ஜனநாயகத்துவமான வாழ்க்கை நடத்தும் தெளிவு உள்ளதா?

சாதியைத் தாண்டும் தைரியம் உள்ளதா?

ஜாதகங்களையும், சடங்குகளையும் மீறும் தெம்பு உள்ளதா?

பெண்களை சமமாக நடத்தும் கொள்கை உள்ளதா?

இப்படி பல கேள்விகளுக்கு விடையளிக்காமல் காதல் மட்டும் கிடைக்குமா?

காதல் என்பது

வாழ்க்கையை புதிய கோணத்தில் புரிந்து கொள்ள செய்வது.

  • சாதி இல்லை என்பது
  • மதம் இல்லை என்பது
  • வரதட்சனையை உடைப்பது
  • சடங்குகளை நொறுக்குவது
  • புதுமையை பூக்க வைப்பது
  • பெண்னை சமமாக நடத்த அழைப்பது
  • ஜனநாயகத்துவமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்துவது

இந்த புரிதல் இல்லாமல் காதல் என்பதே சரியா… சாதி ஒழிய வேண்டும் என மனப்பூர்வமாக நம்பாமல் மாற்று சாதி பெண் மட்டும் வேண்டும் என்பது எதில் போய் முடியும்.. வரதட்சனை என்பது பல வடிவங்களில் வருவது. அது கல்யாணத்தின் போது கேட்கப்படும் சீர்வரிசை மட்டுமல்ல. நாகரீக உலகில் கார் போன்ற பல ரூபங்கள் எடுத்துள்ளது. இதனை உடைக்காமல் காதல் வருமா?

பெண்ணைப்பற்றி புரிந்து கொள்ளாமல், பெண்ணோடு காதல் உண்மையானதா?

காதல் பற்றிய புரிதலைத் தான் முதலில் ஏற்படுத்த வேண்டும்.

காதல் திருமணம் என்றாலும், நிச்சயித்த திருமணம் என்றாலும் கணவன் மனைவிக்குள் மேற்கண்ட புரிதல்களில் நெருக்கம் உருவாக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல், மனைவி ஜனநாயக வாழ்க்கையையும், கணவன் அதிகாரம் செய்யும் வாழ்க்கையும் நடைமுறைப்படுத்தினால் என்னவாகும்.

விவகாரத்துக்கு வராத பல குடும்பங்களில் பெண்கள் சுதந்திரமாக மகிழ்வோடா வாழ்கிறார்கள்?

இங்கே புரிதல் கொண்ட வாழ்க்கை எங்கு மையப்பட்டுள்ளதென்றால், கணவனின் அதிகார வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு மனைவி பணிந்து நடப்பதில் தான். கணவன் தன் மனைவியின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்வதில் இல்லை.

இருண்ட உலகில் வீழ்ந்து கிடக்கும் கணவன்மார்களை, காதல் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். பெண்னை மதிக்க கற்றுத்தர வேண்டும். அது தான் சரியான புரிதல். இந்த புரிதல் ஏற்றுக் கொள்ளாத கணவனிடமிருந்து வெளிவருவதே சரி என்று முடிவெடுக்கும் பெண்களின் புரிதல் சரியானதே.

காதலர்கள் என்றாலும் தம்பதியர் என்றாலும் காதல் என்பதின் அர்த்தம் ஒன்று தான்.

பெண்னை மதிப்பது தான் காதல்.

ஜனநாயக வாழ்க்கை தான் காதல்.

உன்னதமாக வாழ்க்கைத் தேடலில் இருவரும் கை சேர்ப்பது தான் காதல்.

இளைஞர்களுக்கு காதலை புரிய வைப்போம். வாழ்க்கை எளிதாக மாறும். அர்த்தமுள்ளதாகும்.

சமுதாயம் வாழ காதல் வாழட்டும்.

பின்னூட்டமொன்றை இடுங்கள்